அதிர்ச்சி…பிரபல மருத்துவர் மரணம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சென்னை:இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இதனையடுத்து,சாரதா மேனனின் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

saratha menon

இதனைத் தொடர்ந்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,சாரதா மேனன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மன நோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது – சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் அவர் நிறுவி இயங்கி வரும் ‘மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் (SCARF)’ அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும்.

 cmmk,Sarada Menon,

அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.மேலும்,சிறந்த மருத்துவ சேவைக்காக – தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சாரதா மேனன் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

சாரதா மேனன்:

இவர் 1961-ஆம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் பணியில் சேர்ந்து,அந்த மையத்தின் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியைத் தொடர்ந்தவர்.மனநலம் பாதித்தவர்கள் மேம்பாட்டிற்காக 1984-இல் ‘ஸ்கார்ப்’ என்னும் சேவை நிறுவனத்தை சாரதா அவர்கள் தோற்றுவித்தார்.

இதனையடுத்து 1992-ஆம் ஆண்டு மனநலம் பாதித்தவர்களுக்கான அவரது சேவையை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 2016 ஆம் ஆண்டிற்குரிய அவ்வையார் விருதை தமிழக அரசு அவருக்கு வழங்கி சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.