முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு - அரசியல் கட்சியினர் கருத்து

முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு - அரசியல் கட்சியினர் கருத்து

முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு  மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார் .தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் கருத்து:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், புதிய கல்விக்கொள்கை பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

ராமதாஸ்  கருத்து:

முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர்அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

சீமான் கருத்து :

முதலமைச்சர் அறிவிப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில்,புதிய கல்விக்கொள்கையின் ஒரு‌‌ கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.மாநிலங்களின் தன்னாட்சி கல்வியுரிமைகளை மொத்தமாய் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து ஒற்றைப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.