டெல்லி வாசிகளை நெனச்சா “ரொம்ப பெருமையா இருக்கு!”- முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லி வாசிகளை நெனச்சா “ரொம்ப பெருமையா இருக்கு!”- முதல்வர் கெஜ்ரிவால்!

பிளாஸ்மா தானம் செய்த டெல்லி மக்களை நினைத்து நான் பெருமைப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,09,140 ஆக உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இது எந்த வலியையும், பலவீனத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார். இதனையடுத்து, பிளாஸ்மா தானம் செய்ய பலரும் முன்வந்திருந்தனர்.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், “மக்கள் பலரும் பிளாஸ்மா தானம் செய்ததை நான் கேட்கும்போது, டெல்லி மக்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனவே பிளாஸ்மா தானம் செய்த சிலரை வாழ்த்த முடிவு செய்தேன். அதன்படி, பிளாஸ்மா தானம் செய்த ஸ்ரீஷ்டி மற்றும் பூமிகாவுடனான நான் பேசியதை கேளுங்கள்” என தெரிவித்தார்.

அந்த ஆடியோ கிளிப்பில், கொரோனா குணமடைந்த நோயாளி ஸ்ரிஷ்டி ஐந்து நாட்களுக்கு கொரோனா அறிகுறிகளை உணர்ந்ததாகக் கூறினார். ஆனால் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளார். பிளாஸ்மா தானம் செய்தற்காக முதல்வர் கெஜ்ரிவால், அவரைப் பாராட்டினார். மேலும் அவர், அந்த பெண்ணைப்பற்றி பெருமைப்படுவதாகவும் கூறினார்.

பிளாஸ்மாவை தானம் செய்ய மக்களை ஊக்குவித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீஷ்டி, ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்தும் பாராட்டினார்.

தனக்கு பலவீனம் அல்லது வலி எதுவும் ஏற்படவில்லை எனவும், பிளாஸ்மா வங்கியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மிகவும் உதவியாக இருந்ததாகவும், முழு செயல்முறையிலும் அவருக்கு வழிகாட்டியதாகவும் ஸ்ரீஷ்டி கூறினார்.

அதுமட்டுமின்றி, மருத்துவமனை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதால், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இல்லை எனவும், அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றதாகவும் ஸ்ரீஷ்டி கூறினார்.

மேலும், பிளாஸ்மாவை தானம் செய்ய குணமடைந்த தனது அண்டை வீட்டாரையும் பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

Join our channel google news Youtube