சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் இந்தியா செஸ் வீரர் தொம்மராஜு குகேஷ், 8 வது இடத்திற்கு முன்னேறி, இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) ஆனது ஒவ்வொரு மாதமும் செஸ் தரவரிசை பட்டியலை வெளியிடும். அதன்படி, ஆகஸ்ட் மாதம் முடித்த நிலையில், இன்று சர்வதேச செஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் படி, தமிழக வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறியுள்ளார். கடந்த 37 ஆண்டுகள் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை கடந்து, இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற நிலைக்கு குகேஷ் முன்னேறியுள்ளார்.
இதனால் 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது. குகேஷ் 2758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 2,754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.
அதேபோல, தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா சர்வதேச தரவரிசை பட்டியலில் 2727 புள்ளிகளுடன் 19-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.