,
Dindigul Dragons won

இறுதிவரை போராடிய சேப்பாக்..! திண்டுக்கல் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

By

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய CSG vs DGD போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கில் சேப்பாக் அணியில் முதலில் சந்தோஷ் சிவ், ஜெகதீசன் களமிறங்கினர்.

இதில் சந்தோஷ் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய பிரதோஷ் பால் 6 ரன்களில் வெளியேறினார். ஆனால், ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடினார். அதன்பின், பாபா அபராஜித் களமிறங்கி அதிரடி காட்டி அரைசதம் கடந்தார்.

ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, சஞ்சய் யாதவ் மற்றும் ஹரிஷ் குமார் களமிறங்கி சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த அபராஜித், தனது 2வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 74 ரன்களில் சக்கரவர்த்தி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

முடிவில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் திண்டுக்கல் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக் அணியில் அதிகபட்சமாக அபராஜித் 74 ரன்களும், ஜெகதீசன் 37 ரன்களும் குவித்துள்ளனர். திண்டுக்கல் அணியில் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், சரவண குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Dinasuvadu Media @2023