ஒருநாள் மழைக்கே மீண்டும் மிதக்கும் சென்னை.. என்ன சாதித்தது இந்த விடியா அரசு? – ஈபிஎஸ்

ஒருநாள் மழைக்கே மீண்டும் மிதக்கும் சென்னை.. என்ன சாதித்தது இந்த விடியா அரசு? – ஈபிஎஸ்

மழைநீரால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை.

ஒருநாள் மழைக்கு மிதக்கும் சென்னை, என்ன சாதித்தது 8 மாதங்களில் இந்த விடியா அரசு? என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்குப் பருவமழை 20 நாட்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது.

அப்போதாவது பழுதடைந்த மின் உபகரணங்கள், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைத்திருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். முக ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருக்கும் யோசனைகளை, இந்த 8 மாதங்களில் செயல்படுத்தி இருந்தால் கூட, இந்த 3 உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச் சொன்ன இன்றைய முதலமைச்சர், தற்போது இந்த விடியா அரசின் மின்சாரத் துறை அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லுவாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சாலைகளில் ஏற்கெனவே எங்கெல்லாம் மழைநீர் தேங்கியதோ, அந்த இடங்களிலேயே நேற்றும் தேங்கியது. பொதுமக்கள் நேற்று வீடு திரும்ப, பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்று அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் படத்துடன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இந்த அரசின் முதலமைச்சர், பாதிக்கப்பட்ட இடங்களை, அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் பார்வையிடுகிறார். ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கிறார், முந்தைய அம்மா அரசின் மீது பழி போடுகிறார். அதோடு அவரது பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அடுத்த நாள் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்த இடங்களை, நேரில் சென்று பார்த்தால் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே, இனியாவது தங்களின் இயலாமையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிர்கட்சிகளை குறை கூறாமல், மக்கள் நலப்பணிகளில் உண்மையான அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்று இந்த விடியா அரசை வலுயுறுத்திக்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube