231 தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பிய சென்னை மாநகராட்சி…! எதற்காக தெரியுமா…?

சளி,காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரம் கேட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பிய சென்னை மாநகராட்சி.

சளி,காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தாத தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக தனியார் மருத்துவமனைகளுடனான ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் 13.08.2021 அன்று நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சளி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நபர்கள் தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நபர்கள் மற்றும் கோவிட் தொற்று பாதித்து தனியார் மருத்துவமனைகளிலிருந்து 12 நாட்களுக்கு முன்னதாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் விவரங்களை மாநகராட்சியின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும் எனவும், மருத்துவமனை வளாகங்களை அவ்வப்பொழுது கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்து தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சளி. காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களை வழங்காமலும், மருத்துவமனை வளாகங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்காமலும் இருந்த மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 231 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, இனிவருங் காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.