“மாநில இறையாண்மைக்கு சவால்;இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது” – சீமான் கண்டனம்!

மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது எனவும்,நீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“நீட் தேர்விலிருந்து விலக்கு தரக்கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டவரைவுக்கு ஒப்புதல் தரமறுத்து திருப்பியனுப்பிய தமிழக ஆளுநரின் செயல்பாடு பேரதிர்ச்சியளிக்கிறது.எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைக்கோரிக்கையாக தமிழகச்சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குகோரும் சட்டவரைவை அங்கீகரிக்க மறுத்த ஆளுநரின் முடிவு பெரும் சனநாயகப்படுகொலையாகும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு மதிப்பளிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மேலும்,எழுவர் விடுதலை தொடர்பானக் கோப்புகளை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி,தமிழக அமைச்சரவையின் முடிவைக் கேலிக்கூத்தாக்கிய ஆளுநரின் நடவடிக்கைக்கு எவ்விதக் காத்திரமான எதிர்வினையையும் ஆற்றாது ஒத்திசைந்து சென்றதன் விளைவே, இதுபோன்ற அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடக்காரணமாக அமைகிறது என்பதை மாநில அரசு இத்தருணத்தில் உணர வேண்டியது அவசியமாகிறது.

மேலும்,இரண்டாவது முறையாக சட்டவரைவை இயற்றும்போது அதனை நிராகரித்து திருப்பியனுப்ப முடியாது எனும் சட்டவிதியைச் சாதகமாக்க,மீண்டும் விலக்குகோரி தமிழகச் சட்டமன்றத்தில் சட்டவரைவை இயற்ற வேண்டுமெனவும், நீட் தேர்வு என்பதை மாணவர்களின் கல்வி தொடர்பானச் சிக்கல் எனச் சுருங்கப்பாராது,மாநிலத்தின் இறையாண்மைக்குவிடப்பட்ட சவாலெனக் கருதி, நாடு தழுவிய அளவில் பெரும் அணிசேர்க்கையை செய்து,ஒன்றிய அரசுக்கு அரசியல் நெருக்கடியையும்,அழுத்தத்தையும் தந்து, நீட் தேர்வு விலக்கைச் சாத்தியப்படுத்த வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Castro Murugan