நவம்பர் மாதத்திற்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் – மாநகர போக்குவரத்து கழகம்

நவம்பர் மாதத்திற்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் மாதத்திற்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறுகையில்,  கொரோனா பாதிப்பிற்கு பிறகு பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல் மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததைப் போன்று தற்போது பயணிகள் வருகை இல்லாததால், பேருந்துகளில் நகை, செல்போன் திருட்டு போனால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் கொடுக்கும் விதமாக நடத்துநர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

இருப்பினும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தின் முன்னோட்டமாக சென்னையில் உள்ள சில வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, நடத்தப்பட்ட சோதனை திருப்தி அளித்து இருப்பதாகவும், எனவே வருகிற நவம்பர் இறுதிக்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கேமராக்களை இணைத்து ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் பல்லவன் இல்லத்தில் சிறப்பு மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal