காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் விடுப்பு காரணமாக வழக்கு விசாரணை செப்.21ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுவுக்கு கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில் தமிழக அரசு கேட்டுள்ள தண்ணீர் மற்றும் காவிரி ஆணையம் திறக்க சொல்லி உத்தரவிட்டிருந்த வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை திறந்து விட முடியாது என்றும்,
அதற்கு பதிலாக 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலிறுத்தியுள்ளோம். தொடர்ந்து, காவிரி நதியின் வறட்சி, நீர்பற்றாக்குறை அளவீடுகளை ஒட்டுமொத்த நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கணக்கிடவேண்டும். கர்நாடகாவின் 4 அணைகளில் உள்ள காவிரி நதி நீரின் அளவை மட்டும் வைத்து கணக்கிடக்கூடாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசு உரிய கணக்கீடுகள் இல்லாமல் மனுத்தாக்கல் செய்துள்ளது. முதலில் நீர்பற்றாக்குறை, மழை அளவு போன்ற தகவல்களை சரியாக தெரிந்து கொள்ளவேண்டும். தவறான தகவல்களை வைத்துக் கொண்டு உரிய கணக்கீடுகள் இல்லாமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே தமிழக அரசு தொடர்ந்துள்ள மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.