கர்நாடக அரசு காவிரியில் இருந்து உடனடியாக நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தமிழ்நாடு – கர்நாடக இடையே இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது செப்.12ம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் செப்.12ம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெற்றது. அப்போது, காவிரியில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் குறைவான நீர் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டது. பின்னர் காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதை நிறுத்தியது. இரண்டாவது கட்டமாக அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுக்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் பேரில் கடந்த 18-ஆம் தேதி தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடி 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கர்நாடகாவில் நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என கூறினர். அதன்படி, காவிரியிலிருந்து 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடகா அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. காவிரியில் இருந்து உடனடியாக நீர் திறக்க வேண்டும் என்றும் கூடுதல் நீர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் – கர்நாடக இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளை இரு மாநில அரசும் ஒப்புக்கொள்ளாததால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.