பதக்கங்களை வெல்ல உதவும் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசு – ஐஓஏ அறிவிப்பு..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்ல உதவும் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில், இன்று துப்பாக்கி சுடுதல்,டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி, நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.இதனால்,ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.

இந்நிலையில்,மீராபாய் சானுவின் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும் என்று ஐ.ஓ.ஏ பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா ஏ.என்.ஐ. செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரொக்கப்பரிசு:

மேலும்,டோக்கியோவில் பதக்கங்களை வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அறிவித்துள்ளது. அதன்படி,தங்கப் பதக்கம் வென்ற வீரரின்  பயிற்சியாளருக்கு ரூ .12.5 லட்சம், வெள்ளி பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ .10 லட்சம் மற்றும்  வெண்கலப் பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ .7.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.