#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு – சசிகலா திட்டவட்டம்..!

#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு – சசிகலா திட்டவட்டம்..!

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.மேலும்,துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து,சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா,நான்காண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில்,அதிமுக நிர்வாகிகள் சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்காரணமாக,சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, வங்கிகளின் மேலாளர்கள் வங்கிக் கணக்குகளை சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பினருக்கு வழங்கினர். இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.மேலும்,நீதிமன்றக் கட்டணம் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் வருவதால்,இந்த வழக்கு சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,தண்டனைகாலம்  முடிந்து சென்னை திரும்பிய பின்னர் சசிகலா ஆலோசனையின்படி, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சிவில் சென்னை நான்காவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

அதன்படி,இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,டிடிவி தினகரன் சார்பில் மட்டும் வழக்கு திரும்ப பெறப்பட்டது.இதனால்,சசிகலா தரப்பில் விளக்கம் வேண்டும் என வழக்கு ஒத்திவைக்கப்பட்டு நிலுவையில் இருந்தது.

இதனையடுத்து,இந்த வழக்கு வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில்,அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை கைவிடப்போவதில்லை என்றும்,வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube