புல்லட் ரயில் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது -உச்சநீதிமன்றம்..!

புல்லட் ரயில் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மறுபுறம் நீதிமன்றங்களின் தலையீடு குறித்து உச்சநீதிமன்றம்  கவலை தெரிவித்தது.

மும்பை- அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தில் அகமதாபத் சபர்மதியில் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிக்கான ஒப்பந்தத்தை மோன்ட்டே கார்லோ லிமிடெட் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(NHSRCL) வேறு ஒரு நிறுவனத்திடம் வழங்கியது.

இதையடுத்து மோன்ட்டே கார்லோ லிமிடெட் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஒப்பந்தத்தை நிராகரிக்கும் போது எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று மோன்ட்டே கார்லோ தனது மனுவில் கூறினார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்பந்தம் குறித்து  பரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால், அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த   உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது.  ஒருபுறம், இந்தத் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மறுபுறம் நீதிமன்றங்களின் தலையீடு குறித்து கவலை தெரிவித்தது. இதுபோன்ற திட்டங்களை தாமதப்படுத்துவது சரியல்ல என்று நீதிபதி எம்.ஆர்.ஷா மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை  வழங்கியது.

வளர்ந்த நாடுகளால் வளரும் நாட்டிற்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் வெளிநாடுகளால் நிதியளிக்கப்படும் இத்தகைய திட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது மற்றும் தாமதம் செய்வது எதிர்கால முதலீடு அல்லது நிதியை பாதிக்கலாம். இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு இதுபோன்ற மெகா திட்டம் மிகவும் முக்கியமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அத்தகைய சூழ்நிலையில்  இதுபோன்ற வெளிநாட்டு நிதியுதவி பெறும் மெகா திட்டங்களில் தாமதம் ஏற்படுவதால், அது பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் திட்டங்களில் தாமதம் ஏற்படுவதால் நிதிச்சுமை ஏற்படுகிறது. டெண்டர் செயல்முறை அல்லது ஒப்பந்தம் முடிவடையும் வரை குறுக்கீடு இருக்கக்கூடாது.

வளர்ந்த நாடு நிதியுதவி செய்யத் தயாராக இல்லாத வரை ஒரு வளரும் நாடு இவ்வளவு அதிக செலவுத் திட்டத்தை முன்னெடுப்பது கடினம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.  புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுடன் இணைந்து 2017ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதற்காக ரூ.1,06,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரத்திலிருந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் வரை செல்லும் எனஅறிவிக்கப்பட்டது.

இதற்கான செலவுத்தொகையில் சர்வதேச ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் ரூ.86,000 கோடியும் (கடனாக), இந்திய ரயில்வே துறை 10 ஆயிரம் கோடியும், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் தலா 5 ஆயிரம் கோடியும் வழங்கும் என ஒப்பந்தமானது. இந்த திட்டம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும்.

இத்திட்டத்திற்காக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் சுமார் 1400 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களை குஜராத் உயர்நீதிமன்றம் 2019 இல் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Castro Murugan