மீண்டும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் – அண்ணாமலை

annamalai

தஞ்சையில் பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை.

அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி ஜனவரி 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 19ம் தேதி உயிரிழந்தாா்.

மதம் மாறுமாறு கூறி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் புகார் மனு அளித்திருந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மருத்துவமனையிலுள்ள மாணவியின் உடலை வாங்குவதற்கு அவரது பெற்றோா் மறுத்து வந்த நிலையில், நேற்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தலை தொடர்ந்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் மாணவி தற்கொலையோ விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இறந்தவர் சடலத்தை வைத்துக் கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து மக்களைத் திசைதிருப்பும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. மாணவி லாவண்யாவின் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும்.

மாணவியின் குடும்பத்துக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய ராகேல் மேரி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, மத மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார் என்றும் மாணவி மரணத்தில் நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.