#BREAKING: யாசின் மாலிக் குற்றவாளி – என்.ஐ.ஏ. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரை சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.  காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்ட சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் மீது வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் முக்கிய வழக்காக விசாரிக்கப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணையின்போது யாசின் மாலிக், தான் செய்த தவறுகள் மற்றும் சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பின், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. நீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் தீவிரவாதத்தை தூண்டி காஷ்மீரில் பள்ளிகளை எரிப்பது, கல் எறிந்து போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற பலவிதமான நடவடிக்கைகளை தூண்டினார் என யாசின் மாலிக் மீது குற்றச்சாட்டப்படியிருந்தது.

அந்த குற்றங்கள் அடிப்படையில், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை விசாரித்த நீதிமன்றம், யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. மேலும், யாசின் மாலிக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, தண்டனை தொடர்பான விசாரணை மே 25-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை யாசின் மாலிக் அப்போதும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, இந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது உண்மைதான் என்று அதை எதிர்த்து வாதங்களை வைக்காமல் இருந்தால், அவருக்கு அன்றைய தினமே தண்டனை விவரம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. யாசின் மாலிக்-க்கு அதிகபட்ச தண்டனையை அளிக்க வேண்டும் என என்.ஐ.ஏ வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment