#BREAKING: தமிழக அரசு ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

மகப்பேறு விடுப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக தமிழக அரசு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசாணையை அமல்படுத்த கோரிய வழக்கறிஞர் ராஜகுரு வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்த அரசாணையை அமல்படுத்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனிடையே, அரசு பணியில் உள்ளர்வர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்தமகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்