#Breaking:பாலியல் வழக்கு – நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்!

திருவண்ணாமலை:நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான புகாரில் சிக்கிய அக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன்,அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவ,மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது,ஜோதி முருகனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதன்காரணமாக,அவர் மீது போலீசார் போக்சோ உள்பட 14 பிரிவுகளின் கீழ் போலீசார் அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்தனர்.அதன்பின்னர்,சுரபி நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது.குறிப்பாக,ஜோதி முருகனுக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில்,பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் தலைமறைவு ஆகினார்.இதனையடுத்து,திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ஜோதி முருகனை தேடி வந்தனர்.

மேலும்,இந்த வழக்கில் கைதான விடுதி வார்டன் அர்ச்சனா பெங்களூருவை சேர்ந்தவர்.இதனால் அவர் மூலம் ஜோதிமுருகன் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

அதே நேரத்தில் அவர், ஏதாவது ஒரு கோர்ட்டில் சரண் அடைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஜோதிமுருகன் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் ஜோதி முருகன் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.