#BREAKING: பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

சமீபத்தில் திமுக தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம்காட்டி வந்தது. அதன்படி, முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. சுய உதவிக்குழுக்கள் மூலம் சமைத்து சிற்றுண்டி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் 10 முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினமும் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.

இந்த சமயத்தில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் நேற்று கையெழுத்திட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானிகள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு உணவின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 1,545 அரசுப் பள்ளிகளில் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment