#Breaking: வரும் 19ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

வரும் 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-2021ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

அதன்படி, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் மதிப்பெண்களை தெரிவித்து கொள்ளலாம் என்றும் பிளஸ் 2 மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு  குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளி மாணவர்கள் வரும் 22ம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in மற்றும் www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் ஆல் பாஸ் என கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரும் 19ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்