50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்-வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவில் 50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் முதல் இடத்தை வகிப்பது அமெரிக்கா. இந்நிலையில் அங்கு தற்போது 50 சதவீத அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் கொரோனா தரவு இயக்குனர் சைரஸ் ஷாபார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவில் 50% அமெரிக்கர்கள் முழுமையாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இதே முறையை நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த மே மாதம் அமெரிக்காவில் வயது வந்தோரில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு முடிவு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், டெல்டா வகை கொரோனா அமெரிக்காவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை தீவிரமாக நடைமுறை படுத்தினர். இதனை அடுத்து அமெரிக்க அரசு, அரசு அலுவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், அவ்வாறு இல்லை எனில் வாரம் இரண்டுமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று அறிவித்தது.

இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்றது. தற்போது அறிவித்துள்ளபடி, அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசி இரண்டு தவணை அல்லது பைசர் தடுப்பூசி இரண்டு தவணை அல்லது ஜான்சன் அண்ட் ஜான்சன்  தடுப்பூசிகளை அமெரிக்கர்கள் 50% செலுத்தியுள்ளனர். அதாவது 16 கோடியே 50 லட்சம் அமெரிக்கர்கள் தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.