#Breaking:வேலூர் நகைக்கடையில் தங்கம்,வைரம் கொள்ளை – ஒருவர் கைது!

வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும்,நகைக்கடையை சுற்றி உள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

அந்த கொள்ளையன் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக்கவசம் ஆன சிங்கம் பொம்மை முககவசத்தை அணிந்தபடி சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிப்பதற்காக கையில் ஸ்ப்ரே பாட்டில் உடன் இருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த புகைப்படத்தில் இருப்பவரின் அங்க அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்,இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில்,கொள்ளை சம்பவம் தொடர்பாக குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை தற்போது காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற தினத்தில் அப்பகுதியை சுற்றி பதிவான செல்போன் எண்களைக் கொண்டு ராமன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிற்றது.இதனையடுத்து,கொள்ளை சம்பவம் மற்றும் கைது தொடர்பாக வேலூர் சரக டிஐஜி இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.