#BREAKING: நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.. இன்று டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர்!

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் ஆளுநர் ஆர்.என் ரவி.

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தாமதம்படுத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு உள்ளிட்ட மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதற்கும் காக்க வைத்துக்கொண்டிருக்கிறார் ஆளுநர்.

சமீபத்தில் நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து ஆளுநரை சந்தித்த தமிழக அமைச்சர்களிடம், ஒப்புதல் வழங்குவதற்கான கால அவகாசத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் தமிழக அரசு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தனர். ஆளுநரின் நடவடிக்கையால் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் 27-வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மயிலாடுதுறை சென்றபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின் தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு திரும்பியபோது, மன்னப்பந்தல் என்ற இடத்தில் சிலர் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி பயணம் மேற்கொள்ளும் ஆளுநர் இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பக்கோரிக்கை வைத்துள்ள நிலையில், டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் ஆளுநர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்