#Breaking:அதிமுக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு – சட்ட விதியில் திருத்தம்!

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,புதிய அவைத்தலைவர்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,உட்கட்சி தேர்தல் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து,அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு பிறகு யாரும் தேர்வு செய்யப்படாத காரணத்தால் அப்பதவி காலியாக உள்ளதையடுத்து, அதிமுகவின் தற்காலிக தலைவராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,இந்த செயற்குழு கூட்டத்தில்,திமுக ஆட்சியில் நடக்கும் குற்றச்செயல்களுக்கு கண்டனம்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தர அரசை வலியுறுத்தல் உள்ளிட்ட 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மா டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள், கழகம் எனக்குப் பின்னாளும் 100 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து இருக்கும் என்று சூளுரைத்தார்கள். அவர்கள் வகித்த கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மட்டுமே உரியது என்று, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டோம்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பின், கழகத்தை வழிநடத்த 12.09.2017- நாள் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டத்தில், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு, கழகப் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும், அதிகாரங்களும், கழக ஒருங்கிணைப்பாளருக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

மேலும், கழக சட்ட திட்ட விதியினை திருத்தம் செய்ய, கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகம் தாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, கழக சட்ட திட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில், விதி – 20 மற்றும் விதி – 43ம் திருத்தப்பட்டது.

இது தொடர்பாக, கழக அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, கழக செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, கழக சட்ட திட்ட விதிகளில் பின்வரும் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்பட்டது:

  1.  “கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்படி, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் (Single Vote) இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள்” என்று கழக சட்ட திட்ட விதி 20(அ) பிரிவு -2 திருத்தி அமைக்கப்படுகிறது.
  2. கழக சட்ட திட்ட விதி-43: பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக திருத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது:- “ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.”
  3. கழக சட்ட திட்ட விதி- 45: பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக – என்று தீர்மானிக்கப்படுகிறது. “ஆனால், இந்த திருத்தப்படும் சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும், விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.”

மேலும், இந்தத் திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும், இன்றைக்குப் பிறகு கூட்டப்படும் கழகப் பொதுக்குழுவின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதென்றும் இந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

முன்மொழிபவர்கள்:

  • திரு. கே.பி.முனுசாமி, M.L.A., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர்.
  • திரு. ஆர். வைத்திலிங்கம், M.L.A., அவர்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.
  • திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
  • திரு. K.A. செங்கோட்டையன், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்,ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.
  • திரு. C. பொன்னையன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்.
  • டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் முன்னாள் தலைவர், தமிழ் நாடு வக்ஃபு வாரியம்.
  • திரு. ப. தனபால், M.L.A., அவர்கள் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர்

வழிமொழிபவர்கள்:அனைத்து செயற்குழு உறுப்பினர்களும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.