#Breaking:10.5% இட ஒதுக்கீடு – அமைச்சர் துரைமுருகன் அளித்த உறுதி!

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி.

முன்னதாக,வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பிஆர் கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது.

வன்னியர்களை மட்டும் தனி பிரிவா?:

மேலும்,வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. உள் ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும் என்று கூறி தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து,தமிழக அரசின் வன்னியர் உள் இடஒதுக்கீடு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது.இதனால் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

அமைச்சர் உறுதி:

இந்நிலையில்,வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்:

அதிமுக ஆட்சி – அரசியல் காரணம்:

“கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.இதனால் சரியான தரவுகளின்றி இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

முதலைமைச்சர் அறிவுறுத்தியபடி:

இதனிடையே,வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் முதலைமைச்சர் அறிவுறுத்தியபடி மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும்,தற்போது உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

எனவே,அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அரசு முடிவெடுக்கும்”, என்று கூறியுள்ளார்.