‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

புதுடெல்லி, ஆக.30- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் தலைமை நீதிபதிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது இதுவே முதன் முறை.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். கேஹரின் பதவிக் காலம் கடந்த ஞாயிறுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நேற்று முன்தினம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பல்வேறு முக்கிய வழக்குகளில் மிஸ்ரா உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக, மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மேமன் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டை கடந்த 2015 ஜூலை 30-ந்தேதி, தீபக் மிஸ்ரா ரத்து செய்தார். இதையடுத்து மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர், தீபக் மிஸ்ராவுக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் வந்தன. இதன் காரணமாக அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 5 கமாண்டோ வீரர்கள் உள்பட மொத்தம் 22 வீரர்கள் அவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு வேறு எந்த நீதிபதிக்கும் வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்ததும் தீபக் மிஸ்ராதான். சட்ட சேவை கழகத்தின் தலைவாக இருக்கும் மிஸ்ரா, சிறைக் கைதிகள் இலவச சட்ட உதவி பெறுவதற்கும் வீடியோ கான்பரன்சிங் முறையை அறிமுகப் படுத்தினார்.
மிஸ்ராவுடன் சேர்த்து மொத்தம் 3 பேர் ஒடிசாவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளனர். முன்பு மிஸ்ராவின் தந்தை வழி மாமா ரங்கநாத் மிஸ்ரா (1990-91), நீதிபதி ஜி.பி. பட்நாயக் (2002) ஆகியோர் இந்த பொறுப்பில் இருந்தனர். தீபக் மிஸ்ராவின் தாத்தா கோதாபாரிஷ் மிஸ்ரா ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற கவிஞராக இருந்தார். இதன் காரணமாக தீபக் மிஸ்ரா அளிக்கும் தீர்ப்புகள் கவித்துவம் மிக்கதாகவும் இருக்கும். கோதாபாரிஷுக்கு ரகுநாத், ரங்கநாத், லோக்நாத் என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.
இவர்களில் லோக்நாத் அசாம் மாநில கவர்னராக கடந்த 1991 முதல் 1997 வரை பொறுப்பில் இருந்தார். மற்றொரு மகன் ரங்கநாத் மிஸ்ரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். ஓய்வுக்கு பின்னர் 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரணை நடத்திய கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு 40 ஆண்டுகள் சட்டத்துறை அனுபவம் உண்டு. அரசியலமைப்பு, சிவில், கிரிமினல், வருவாய், வரி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் வாதாடி நுணுக்கமான சட்ட அறிவைக் கொண்டவராக மிஸ்ரா உள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment