ஆண் கைதிகளுக்கு நிகரான பெண் கைதிகள்…!

சென்னை: புழல் மத்திய சிறைச்சாலையில் பல்வேறு விசாரணை, தண்டனை கைதிகள் என ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது நடத்தப்படும் அதிரடி சோதனையில் ஆண் கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில், புழல் சிறையில் பெண்கள் பிளாக்கில் 100க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். இவர்களிடம் செல்போன், சிம்கார்டு மற்றும் பண நடமாட்டம் இருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாதவரம் சரக போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வன் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரி உட்பட ஏராளமான போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பெண்கள் சிறை வளாகத்துக்குள் இருக்கும் ஒருசில அறைகளில் சிம்கார்டு, ஒரு செல்போன் மற்றும் ரூ.1,500 ரொக்கம், தங்க மூக்குத்தியை பறிமுதல் செய்தனர். இவற்றை பெண்கள் சிறைக்கு கடத்தி வந்தவர்கள் யார், எந்த வழியாக கொண்டு வரப்பட்டது என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment