நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள்!

0
197

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று திவாகரன் கூறியுள்ளார்.
அனிதாவின் மரணத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதையடுத்து, அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் நேற்று எரிக்கப்பட்டது.

அவரது உடலுக்கு, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அனிதாவின் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சம் உதவித் தொகையை மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளை (திங்கள்கிழமை) அனைத்துக் கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம், “நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க அழைப்பு விடுத்துள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு இதில் தினகரன் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள். நீட் பிரச்னை அனிதாவின் மரணத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலக வேண்டும்” என்று கூறியுள்ளார்.