கடன் கொடுப்பவர்களுக்கு ஆப்பு : முதலமைச்சர் அதிரடி அறிக்கை

கந்துவட்டி கொடுமையால் நேற்று முன்தினம் நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட  நான்கு பேர்   தீக்குளித்தனர். இது நெல்லையை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கியது.
இதுவரை கடந்த 6 மாதத்தில் நெல்லையில் மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

கொங்கு மண்டலத்தில் கந்துவட்டி கொடுமை அதிகமாக இருப்பது நேற்று அம்பலமானது. மேலும் இவர்கள் வாங்கிய கடனுக்கு பதிலாக சில கும்பல் ” கிட்னி ” திருடி  வாங்கிய கடனுக்காக  அதனை விற்று பணத்தை பெற்றுகொள்கின்றனர். சமீபத்தில் ரவி என்கிற தொழிலாளி மீட்கபட்டார். கொங்கு மண்டலத்தில் பல விசைத்தறி தொழிலாளர்கள் இந்த கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

கந்துவட்டி தடுப்புசட்டத்தை உடனடியாக அமுல்படுத்த மாவட்ட கலெக்ட்டர்களுக்கு தமிழக முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிரபித்துள்ளார்

இது தொடர்பாக முதல் அமைச்சர் அறிக்கையில் கூறியதாவது:

“பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக சில சமயங்களில் தனியாரிடம் பணம் கடன் வாங்குகின்றனர். இதனைப் பயன்படுத்தி கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவர்களை சட்டத்திற்கு புறம்பாக அதிக வட்டி கேட்டு வற்புறுத்துகின்றனர்.

இத்தகைய அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக புரட்சித் தலைவி அம்மா 2003-ம் ஆண்டு “தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003” என்ற சட்டத்தை கொண்டு வந்தார். இந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தச் சட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து அதிக வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வட்டிக்கு பணம் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற தொகையை நீதிமன்றத்தின் மூலம் செலுத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதீத வட்டி வசூல் செய்பவர்கள் தங்களிடம் பணம் பெற்றவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதனை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

அம்மாவின் ஆசியுடன் செயல்படும் இந்த அரசும் அதீத வட்டி வசூல் செய்பவர்களிடமிருந்து பொது மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மாவினால் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003-ன் அடிப்படையில் அதீத வட்டி சம்பந்தமாக மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்கும்படி நான் மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

எனவே பாதிக்கப்பட்ட பொது மக்கள் எந்தவிதமான அச்சத்திற்கும் ஆளாகாமல், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை அதிகாரிகளையும் அணுகி, தக்க நிவாரணம் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.