வரலாற்றில் இன்று – ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த நாள் இன்று….!

 இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947 ஆகஸ்ட் மாதம் இரு சுதந்திர நாடுகளான போதிலும் இரண்டுக்கும் இடையிலிருந்த மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழிருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் சேர விருப்பம் தெரிவிக்காமல் சுயேச்சையான சமஸ்தானமாகவே இருந்துவந்தது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் ராஜ்ஜியம் என்பதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அதனை தன்னுடன் இணையுமாறு வற்புறுத்தி வந்தது. அங்கிருந்த தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு கலகங்கள் மூட்டி வந்தது. குறிப்பாக பத்தான் பழங்குடிகள் மூலமாக கலவரங்களை தூண்டியது. அக்டோபர் 20ம் தேதி பத்தான் பழங்குடிகளின் உடைகளில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் ஊடுருவியது. விழித்துக் கொண்ட மகராஜா ஹரி சிங் இந்தியாவின் உதவியை உடனடியாக நாடினார். அப்போது இந்தியாவின் முதலாம் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு எழுத்துபூர்வமாக சம்மதம் அளித்தால் மட்டுமே இந்திய ராணுவம் காஷ்மீருக்குள் நுழையலாம் என்று இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினார். ராஜா ஹரி சிங் இவ்வோசனையை ஏற்று “இன்ஸ்ட்ருமென்ட் ஆப் ஆக்சசன்” உடன்படிக்கையில் 1947 அக்டோபர் 26ம் தேதி கையொப்பமிட்டு கொடுத்தார். இந்திய அரசின் சார்பில் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டார். அதன்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் காஷ்மீரில் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தது. ஒப்பந்த விதிகளின்படி ராஜா ஹரி சிங்குக்கு மன்னர் மான்யம் அளிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீர் மாநில இடைக்கால அரசின் பிரதமராக ஷேக் அப்துல்லா இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் பாகிஸ்தானின் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து பாகிஸ்தான் வசமே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.