கேரள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்க்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்…!

கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்ய முற்ப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
இதுவரை 4 முறை ஜாமீனுக்காக மனு செய்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5-வது முறையாக திலீப்புக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இருமுறை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், 2முறை உயர்நீதிமன்றத்திலும் இதற்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை பலாத்காரம்
கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்ேததி கேரள நடிகை படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, ஒரு கும்பல் அவரைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, அதை செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இது குறித்து நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, பல்சர் சுனி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
நடிகர் திலீப் கைது
முக்கியக் குற்றவாளி பல்சர் சுனியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை கடத்தலுக்கும் ஒரு நடிகருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், நடிகை கடத்தலுக்கு திட்டம் வகுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடிகர் திலீப்பை கடந்த ஜூலை மாதம் 10-ந்ேததி போலீசார் கைது செய்தனர். அவர் அங்கமாலி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
5-வது முறையாக ஜாமீன்
நடிகர் திலீப் ஜாமீன் கோரி இதுவரை அங்கமாலி நீதிமன்றத்தில் 2 முறையும், உயர் நீதிமன்றத்தில் 2 முறையும் மனுத்தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது.  இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் 3-வது முறையாக திலீப் ஜாமீன் கோரி கடந்த மாதம் 20ந்தேதி மனு தாக்கல் செய்து இருந்தார்.
சினிமாவில் இருந்து நீக்க
அந்த மனுவில், திலீப் தரப்பில் கூறப்பட்டு இருந்ததாவது, “ நான் முழுமையாக குற்றமற்றவன். சினிமாதுறையில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் இந்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளேன். இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி பல்சர் சுனிலின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் போலீசார் என்னை கைது செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது” எனத் தெரிவித்து இருந்தார்.
ஜாமீன்
இந்த ஜாமீன் மனு கடந்த 27-ந்ேததி விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுமீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிபதி சுனில் தாமஸ் திலீப் மீதான விசாரணை அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், தொடர்ந்து அவர் சிறையில் இருப்பது தேவையில்லாதது ஆதலால், நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்குகிறேன் என நேற்று  தீர்ப்பளித்தார். அதேசமயம், நடிகர் தலீப்புக்கு கடும் கட்டுப்பாடுகளையும் நீதிபதி தாமஸ் விதித்துள்ளார். 
நடிகர் திலீப் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், ரூ. ஒரு லட்சம் சொந்த ஜாமீனிலும், அதே அளவு மதிப்புடைய 2 பத்திரங்களையும் ஒப்படைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக, நடிகர் திலீப் தனது செல்வாக்கை பயன்படுத்தி, வழக்கில் தொடர்புடைய எந்தவிதமான சாட்சியங்களையும் அழிக்க முயற்சிக்க கூடாது என்றும், தேவை ஏற்பட்டால் விசாரணை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நடிகர் திலீப்புக்கு ஜாமீன் கிடைத்தது அறிந்ததும் அவரை வரவேற்க அவரின் ரசிகர்கள் சிறை வளாகத்தின் முன் கூடினர். மேலும், இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Comment