“தீவிரவாதிகள் எல்லோரும் காஷ்மீரை விட்டு ஓடத் தொடங்கியுள்ளனர்” – மார்தட்டும் அருண் ஜெட்லி!!

இந்திய ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருவதால் காஷ்மீரை விட்டு தீவிரவாதிகள் ஓட தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தினரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி,  ஜம்மு – காஷ்மீரில் இருந்து, தீவிரவாதிகளை விரட்டுவதே மத்திய அரசின் இலக்கு என தெரிவித்தார்.
செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கையால், தீவிரவாதிகள் கடுமையான பண தட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும்  காஷ்மீரை பயங்கரவாத மையமாக வைத்திருந்த அவர்கள், தற்போது, காஷ்மீரை விட்டு ஓட தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் தப்புவதற்கு காரணமான, கல்வீசும் கும்பல் பெருமளவில் குறைந்துள்ளனர் என்றும் தற்போதைய சூழலில் காஷ்மீரில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த எந்த பயங்கரவாதியும் கனவு காண முடியாது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Leave a Comment