அரசின் பணமோசடி தான் ரூபாய் நோட்டு வாபஸ்:பிஜேபி மூத்த முன்னாள் அமைச்சர் அருண் சோரி

புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்ததற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தான் காரணம் என பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறிக்க்கொண்டிருக்கிற போது, தேசிய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த சலசலப்பு அடங்குவதற்குள் பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரியும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சீரழிவிற்கும் காரணம். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி. இது ஒரு முட்டாள் தனமான யோசனை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர்.பழைய ரூபாய் நோட்டுக்கள் 99 சதவீதம் வங்கிகளிடம் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. அப்படியானால் கருப்பு பணமும், கணக்கில் வராத பணமும் இந்த திட்டத்தால் ஒழிக்கப்படவில்லை என்று தானே அர்த்தம். அரசின் தவறான வழிகாட்டுதலே ஜிஎஸ்டி. கடந்த 3 மாதங்களில் 7 முறை இதன் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

இந்த மோசமான திட்டத்தை சுதந்திரத்துடன் ஒப்பிட்டு, சிறப்பு பார்லி., கூட்டம் நள்ளிரவில் கூட்டப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். யஷ்வந்த் சின்காவின் கருத்திற்கு பா.ஜ., அளித்துள்ள பதில் பற்றி கூறிய அருண் சோரி, இது தான் அவர்களின் வழக்கமான செயல்பாடு. யஷ்வந்த் சின்காவின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து பா.ஜ.,வில் பலருக்கும் இதே போன்ற கருத்து உள்ளது.

ஆனால் தயக்கம் அல்லது பயத்தின் காரணமாக அவர்கள் கேள்விகள் எழுப்புவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment