அரசுப் பள்ளிகளை அழிக்கத் துடிப்பதா?

சென்னை, –

மத்திய நிதி ஆயோக் குழு சமீபத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறை களுக்கான மூன்றாண்டு (2017-18, 2018-19, 2019-20) செயல்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் போன்ற சேவைத்துறையில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளை, அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடிய ஒரு ஆபத்தான திட்டத்தை நிதி ஆயோக் மூலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 20 மற்றும் 20க்கு கீழே உள்ள மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகள் 1 லட்சம் உள்ளதாகவும், 50 மற்றும்50க்கு கீழே உள்ள மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகள் 3.70 லட்சம் உள்ளதாகவும் இவை நாடு முழுவதும் உள்ள மொத்த அரசுப்பள்ளிகளில் 36 சதவிகிதம் என நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. மாநில அரசு இத்தகைய அரசுப்பள்ளிகளைஅரசு மற்றும் தனியார் கூட்டுத் திட்டத்தின் அடிப்படையில் நடத்திட தனியாரிடம் ஒப்படை க்க வேண்டுமென்றும், இப்பள்ளிகளை நடத்துவதற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் நிதிஆயோக் வெளியிட்டுள்ள செயல்திட்டம் கூறுகிறது. இந்த அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், மேலும் கூறியிருப்பதாவது:தனியார் துறையை ஊக்குவிக்கும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையால் தமிழகத்தில் 2001ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளில் 11,68,439 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 36,17,473 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இதே காலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள் ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்திட, பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்காதகாரணத்தினால் தமிழகத்தில் பல அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இப்போதும் தமிழகத்தில் பல மாவட்டங் களில் மாணவர்களின் எண்ணிக்கை 50க்கும்,20க்கும் குறைவாக பல ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இத்தகைய பள்ளிகளைஅரசு – தனியார் கூட்டு திட்டம் என்ற பெயரில்தனியாரிடம் ஒப்படைப்பது நாளடைவில் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியை தனியார்மய மாக்கிடுவதில் முடியும். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பெரும்பான்மை யாக அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனர். இதனால் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த- குறிப்பாக கிராமப்புற குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக மாறிவிடும். கல்வி என்பது அடிப்படை உரிமை; அரசு அளிக்கக் கூடிய சலுகையல்ல.ஏழை, எளிய, தலித் மற்றும் பழங்குடி பகுதியைச் சார்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் பொறுப்பை மத்திய, மாநில அரசுகள் தட்டிக் கழிக்கின்றன.அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி, பாதுகாத்து அனைவருக்குமான கல்வியை உத்தரவாதப்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு, நிதிஆயோக் என்ற குழுவை அமைத்தது. முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கிற போது மாநில முதலமைச்சர்களும், நிதிஆயோக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் நிதிஆயோக் குழு செயல்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது மாநிலமுதலமைச்சர்களை அழைக்காமல், அவர்களுடைய ஆலோசனைகளை பெறாமல் நிதிஆயோக் குழு பள்ளிக்கல்வியை தனியார்மய மாக்கக் கூடிய முடிவை எதேச்சதிகாரமாக எடுத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வி பிரச்சனையில் மத்திய அரசு எடுத்திருக்கக் கூடிய முடிவு மாநிலங்களுடைய உரிமை களை பறிக்கக் கூடியதாகும்.

அரசுப்பள்ளிகளை தனியார்மயமாக்கிடும் மத்திய அரசின் திட்டத்தை வன்மையாக கண்டிப்பதோடு இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.அரசுப்பள்ளிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய நிதிஆயோக் குழுவின் மூன்றாண்டு செயல்திட்டத்தை மாநிலஅரசு கடுமையாக எதிர்த்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது.மக்களின் அடிப்படைத் தேவையான கல்வியை தனியார்மயமாக்கி ஏழை, எளிய குடும்பங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிடும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கண்டன குரலெழுப்புமாறு அனைத்து பகுதி மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment