கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடைக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது

புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடைக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. வெளிநாட்டில் முதலீடு செய்தது தொடர்பான விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ., சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாததால் சி.பி.ஐ., சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் எனப்படும் தேடப்படும் நபர் என்ற நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், கார்த்தி சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தொழில் அதிபர் மல்லையா போல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடாமல் இருக்கவே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது என சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நோட்டீசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று( ஆக., 14) விசாரித்த சுப்ரீம் கோர்ட், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை இல்லை என்று கூறியது. அதாவது, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு எதிராக இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை வரும், 18 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Comment