மோடி அரசை விளாசிய அரியானா நீதிபதிகள்…!

டில்லி:
தேரா சச்சா தலைவர் ராம் ரஹிம் சிங்க்கு எதிரான பாலியல் வழக்கில் அவரை குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து தேரா சச்சா ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இப்படி வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என உளவுத்துறை எச்சரித்திருந்தும் கூட, பல லட்சம் பேரை பஞ்ச்குலா நகருக்குள் அனுமதித்திருந்தது ஹரியானாவின் கட்டார் தலைமையிலான பாஜ அரசு.
இதனால் கலவரம் ஆரம்பித்த உடனேயே பாதுகாப்பு படையால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 5 மணி நேரங்கள் கலவரம் நீடித்த பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் சார்ந்த சம்பவங்களில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 3 ஊடக வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
இது குறித்த வழக்கை ஞாயிறன்று பஞ்சாப், -ஹரியானா உயர்நீதிமன்றம் விசாரித்தது. தலைமை நீதிபதி சரோன், நீதிபதிகள் சூர்யகாந்த், அவினேஷ் ஜின்கன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யா பால் ஜெயின் ஆஜரானார். இது மாநில அரசின் பிரச்சினை என்று அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
இதனால் கோபமைடந்த நீதிபதிகள் ‘‘ ஏன் மத்திய அரசு மாநிலங்களை காலனி போல் கையாளுகிறது. தேசிய ஒருமைப்பாடு என்பது கட்சிகளுக்கு மேலானது. நாமெல்லாம் ஒரே தேசமா அல்லது இது கட்சியின் தேசமா?.
அரியானா இந்தியாவில் இல்லையா? ஏன் பஞ்சாப்-, அரியானா மாற்றாந்தாய் பிள்ளை போல நடத்தப்ப டுகிறது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், ’’பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது. அவர் இந்தியா முழுமைக்குமான பிரதமர் என்று’’ நீதிபதிகள் கோபத்துடன் கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும், நீதிபதிகள் மனோகர் லால் கட்டா தலைமையிலான அரியானா மாநில பாஜ அரசையும் விமர்சனம் செய்தனர். ‘‘அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை பற்றிய எரிய மாநில அரசு அனுமதித்துள்ளது. போராட்டக்காரர்களிடம் அரசு சரண் அடைந்துவிட்டது’’ என்றனர்.

பிரதமரையும், முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்த 3 நீதிபதிகள் குறித்த சில குறிப்புகள்…….
நீதிபதி எஸ்எஸ் சரோன்
பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. இவருக்கு வயது 61. 2016ம் ஆண்டு ஜாட் சமூக இடஒதுக்கீடு வழக்கு மற்றும் அரியானாவின் தலைமை நாடாளுமன்ற செயலாளர் பணி நியமனம் ரத்து உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். ஜாட் போராட்டத்தின் போது 10 பெண்கள் காரில் இருந்து கீழே இறக்கி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை சரியாக விசாரிக்கவில்லை என்று விளாசி தள்ளினார்.
1980ம் ஆண்டு வக்கீலாக இவர் சட்ட பணியை தொடங்கி, பஞ்சாப்பு அரசு சட்ட அதிகாரியாக பணியாற்றி, பின்னர் 2002 ஜூலை மாதம் நீதிபதியானார். இவர் வரும் 3ம் தேதி ஓய்வுபெறுகிறார்.

நீதிபதி சூர்யகாந்த்
55 வயதாகும் இவர் பஞ்சாப் போலீசாரின் ரூ. 6 ஆயிரம் கோடி போதை பொருள் வழக்கின் சிறப்பு அமர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிறைக் கைதிகளுக்கான உரிமைகள் மற்றும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப்.க்கு 350 ஏக்கர் நிலம் வழங்கும் அரசின் முடிவை தடுத்து நிறுத்தியவர். இவர் 1984ம் ஆண்டு ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் சட்ட பணியை தொடங்கினார்.
38 வயதில் ஹரியானா அரசு வக்கீலாக பணியற்றினார். 42வது வயதில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
நீதிபதி அவினேஷ் ஜின்கன்
3 பேரில் இவர் தான் இளையவர். 48 வயதாகும் இவர் கடந்த ஜூலை மாதம் தான் உயர்நீதிமன்ற நீதிபதியானார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.
இவர் குறிப்பாக சிவில் மற்றும் வரிவிதிப்பு வழக்குகளை கையாண்டுள்ளார். இவர் நீதிபதி சரோனுடன் இணைந்து சண்டிகர் மாநகராட்சியில் நியமன கவுன்சிலர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வழக்கை விசாரித்து வருகிறார்.

author avatar
Castro Murugan

Leave a Comment