நல்லாசிரியர் விருது தேர்வில் பாரபட்சம்: தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

சேலம்: நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர் தேர்வில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக, தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழக அரசு சார்பில், செப்., 5ல் நடக்கும் ஆசிரியர் தினவிழாவில், சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்படும். அதற்காக, விருது பெற தகுதியுடைய ஆசிரியர்கள், தங்கள் செயல்பாடு குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பர். இதை ஆய்வு செய்து, கல்வி துறை அலுவலர்கள், விருதுக்கு ஆசிரியர்களை பரிந்துரைப்பர். நடப்பாண்டு, ஆசிரியர்களிடம் இருந்து எந்த அறிக்கையும் பெறாமல், கல்வி துறை அலுவலர்களே ஆய்வுசெய்து, ஆசிரியர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், கல்வி துறை அலுவலர்கள் பரிந்துரையுடன், ஆசிரியர்களின் சாதனை பட்டியல் மற்றும் விபரம் அனுப்பப்படும். இதனால், ஆசிரியர்கள் இடையே அதிருப்தி இல்லை. தற்போது, கல்வி துறை அலுவலர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், பலரும் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயரை பரிந்துரைக்க முடிவு செய்துள்ளனர். பல இடங்களில், நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க பெறப்படும் தொகையை, ஏலம் விடுகின்றனர். இதனால், அந்த விருதுக்கான மரியாதையே போய்விட்டது.

தமிழக அரசு தலையிட்டு, தகுதியான ஆசிரியர்களுக்கு, விருது வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

Leave a Comment