வியாபாரியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

வியாபாரியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, காயல்பட்டினத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காயல்பட்டினம் அப்பா பள்ளி தெருவைச் சேர்ந்த துணி வியாபாரி மீரான் தம்பி (வயது 35). இவர், கடந்த 26–ந்தேதி இரவில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டு சென்றார். அப்போது பஸ்சில் மது போதையில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், அவர் மீது வாந்தி எடுத்தார். இதனை அவர் கண்டித்தார். பின்னர், தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் பஸ் நின்றபோது, வாந்தி எடுத்த நபரும், அவருடன் பயணம் செய்த மற்றொரு நபரும் சேர்ந்து, மீரான் தம்பியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மீரான்தம்பி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும், காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அசரப் அலி பைஜி, பொதுச்செயலாளர் சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறிதுநேரத்தில் 200–க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ‌ஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அப்பகுதியில் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து செல்லாமல், மாவட்ட எஸ்பிநேரில் வந்து கொலையாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தால்தான் கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர். 

இதையடுத்து தூத்துக்குடி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக மீரான் தம்பி பயணம் செய்த தனியார் பஸ்சை மறிப்பதற்காக காயல்பட்டினம் தாயிம் பள்ளி அருகில் நேற்று முன்தினம் இரவில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். ஆனால் அந்த பஸ் காயல்பட்டினம் வழியாக செல்லாமல், மாற்று வழியில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

author avatar
Castro Murugan

Leave a Comment