நிதிபற்றாக்குறை இலக்கை எட்டுவது அரசுக்கு சுலபம்

தற்போதைய  நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவது  அரசுக்கு சுலபம் தான்  என்று ஆய்வு முடிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வறிக்கையை  வெளியிட்டுள்ள SBI , பட்ஜெட்டில் கூறியுள்ளபடி பங்கு விலக்கல் மூலம் ரூபாய். 72,500 கோடி நிதி திரட்டப்படும் ஆகவே நடப்பு நிதியாண்டின் 3.2 % என்கிற நிதி பற்றாக்குறை இலக்கை மத்திய  அரசு எளிதாக எட்டிவிடும் என்று குறிப்பிட்டுள்ளனர்

 இந்த  ஆய்வில் மேலும் கூறியது யாதெனில் ; 2017-18 நிதியாண்டில் அரசுக்கு  பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என கூறியது. இதனால்  நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிப்புகள் இருந்தன. மத்திய  அரசின் சில திட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் இதற்கு காரணமாக
அமைந்தன.

ஆனால் 3.2 % நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவது கடினமல்ல , பட்ஜெட் எதிர்பார்ப்புபடி வருமானம் குறைந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் பங்கு விலக்கல் மூலம் ஈடு செய்ய முடியும். மேலும்,  அரசு திட்டமிட்டபடி ரூ.72,500 கோடி என்கிற பங்குவிலக்கல் இலக்கை எட்டும், இதில் ரூ.60,000 கோடிவரை தற்போது திரட்டப்பட்டுள்ளது. எனவே மீதம் திரட்டப்பட வேண்டியது மிகச் சிறிய அளவுதான். 2009-10-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் முதல் முறையாக பங்கு விலக்கல் இலக்கை மத்திய அரசு எளிதாக  எட்டியுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்தபட்ச பங்கு விலக்கல் உக்தி  மூலம் ரூ.19,759 கோடியை மத்திய அரசு திரட்டியுள்ளது. ஹெச்பிசிஎல் நிறுவனத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் மூலம் ரூ.30,000 கோடியும், பொதுக் காப்பீடு நிறுவன பங்குகளை ஐபிஓ வெளியிட்டதன் மூலம் ரூ.10,662 கோடியும் வந்துள்ளது.

இது தவிர    மருத்துவ சேவை ஆலோசனை நிறுவனமான ஹெச்எஸ்சிசி, இபிஐ, என்பிசிசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்குகளையும் விற்பனை செய்ய அரசு இலக்காக  வைத்துள்ளது.

2017-18 பட்ஜெட் மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், மூலதனச் செலவுகளில் ரூ.70,000 கோடியும், வருவாய் செலவுகளில் ரூ.38,000 கோடியையும் அரசு கட்டுப்படுத்தும் என்றும் மதிப்பிடுவதாகவும், இதன் மூலம் நிதிப் பற்றாக்குறை இலக்கை தற்போது உள்ள அளவிலேயே தொடர முடியும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.