இளம் மாணவி அனிதாவுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை கண்ணீர் அஞ்சலி

மின்னாபோலிஸ்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது.
இது தொடர்பாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயலாளர் இரமாமணி செயபாலன் வெளியிட்ட அறிக்கை:
நீட் என்ற மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினால், வாழ்க்கையில் மருத்துவராக வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் தன் குடும்ப வறுமையெல்லாவற்றையும் பொருட்படுத்தாது, தன் இலட்சியக் கனவை அடையும் வகையில் அயராதுழைத்து மிகஅதிக மதிப்பெண்கள் பெற்றும், உச்சநீதி மன்றத்தின் படியேறி கதவுகளைத் தட்டியும், சமூக நீதிக்கான அத்துணை வழிகளும் அடைக்கப்பட்டதை தாங்க இயலாத மருத்துவராக வலம்வர இருந்த, அரியலூர் மாவட்டத்தில், குழுமூர் என்னும் குக்கிராமத்தில் பிறந்த அனிதா என்ற ஒரு மொட்டின் வாழ்க்கை அநியாயமாகப் பறிக்கப்பட்டதற்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது. இது மிகவும் வருந்தத்தக்க செய்தி.
நீட் தேர்வினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற தமிழக மாணவர்கள், இது போன்று மற்றும் ஒரு துயர சம்பவம் நடவாமல் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்யவேண்டும் என்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றது. மேலும், மாணவர்களும் இது போன்ற தங்களை மாய்த்துக்கொள்ளும் துயரச் சம்பவங்களில் ஈடு படாமல் பொறுமை காத்திட அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். இது குறித்து வட அமெரிக்காவில் உள்ள பல தமிழ்ச்சங்களும், பல தமிழ் அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் இரங்கல் கூட்டங்கள் நடத்துவதற்கு, ஏற்பாடுகள் மிக துரிதாமாக செய்யப்பட்டு வருகின்றது.
தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நடைபெறும் இரங்கல் கூட்டங்களில் கலந்து கொண்டு நமது உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துமாறு பேரவையின் சார்பில் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
இளம் தளிர் அனிதாவின் மறைவிற்கு பேரவையின் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment