புரோ கபடி: யு-மும்பாவை புரட்டிபோட்டு பந்தாடியது குஜராத்

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.
இந்த சீசனில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணிக்கு இது 2-ஆவது வெற்றியாகும். அதேநேரத்தில் யு-மும்பா அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய குஜராத் அணி 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 6-ஆவது நிமிடத்தில் யு-மும்பா அணியை ஆல் அவுட்டாக்கிய குஜராத் அணி 9-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு யு-மும்பா பின்கள வீரர்கள் சிறப்பான டேக்கிள்கள் மூலம் புள்ளிகளைப் பெற்றுத்தர, அந்த அணி ஒரு கட்டத்தில் 5-12 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. இதன்பிறகு குஜராத் வீரர்கள் ரோஹித் குல்லா, சச்சின் ஆகியோர் தலா 4 புள்ளிகளைக் கைப்பற்ற, முதல் பாதி ஆட்டநேர முடிவில் குஜராத் அணி 20-6 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதன்பிறகு நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் யு-மும்பா அணியின் பின்கள வீரர்கள் அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றபோதிலும், அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசி வரை யு-மும்பா அணியால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. இறுதியில் குஜராத் அணி 39-21 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியை வீழ்த்தியது. குஜராத் தரப்பில் ரோஹித் குல்லா தனது சிறப்பான ரைடின் மூலம் 8 புள்ளிகளைப் பெற்றார்.
இன்றைய ஆட்டங்கள்
தெலுகு டைட்டன்ஸ்-யு.பி.யோதா
நேரம்: இரவு 8
குஜராத்-தபாங் டெல்லி
நேரம்: இரவு 9
இடம்: ஆமதாபாத்
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Leave a Comment