அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் அடங்கிய ‘ஸ்மார்ட்’ கார்டு – அமைச்சர் செங்கோட்டையன்


அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை அடங்கிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “பள்ளிக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத் திட்டத்தை மாற்றுவது, தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையை அதில் இடம்பெறச் செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
புதிய பாடத் திட்டமானது வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் இருக்கும்.
தமிழக கல்வித் துறையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக பாடங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனை மாற்ற இருக்கிறோம்.
மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் நவம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பின்னர் மக்களிடம் கருத்து கேட்கப்படும். கல்வியாளர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தப் பின்னர், அடுத்தக் கல்வியாண்டு முதல், அவை பாடமாக வெளியிடப்படும்.
மத்திய அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலான பயிற்சி மையங்கள் 500 இடங்களில் அமைக்கப்படும். வருகிற 20-ஆம் தேதிக்கு பின்னர் இதற்கான பணிகள் தொடங்கும்.
அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை பற்றிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும். ‘ஸ்மார்ட்’ வகுப்புகளும் தொடங்கப்படும்.
தொழிலதிபர்களின் உதவியுடன் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க, பள்ளி திறந்த நாளில் இருந்து பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *