இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் வேண்டும் ..; இன்று தேர்தல் ஆணையரை சந்திக்கும் எடப்பாடி அணியினர்…!

0
173

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று தனியாக செயல்பட்டார். பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி செயல்பட்டதால் இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் தரப்பில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்துகொண்டிருந்த பொழுதே பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் பழனிச்சாமி அணியும் இணைந்ததால், சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்க வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து வரும் 29-ம் தேதிக்குள் இருதரப்பு தங்களது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இறுதிக்கட்ட விசாரணை அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, முதல்வர் பழனிச்சாமி அணி தரப்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் எம்.பி ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்ய  டெல்லி சென்றுள்ளது.
அந்த அறிக்கையில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்களின் நகலை சமர்ப்பிக்க உள்ளனர். பொதுக்குழுவில் சசிகலா, தினகரனை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்குவது, இரட்டை இலை சின்னத்தை மீட்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன் தரப்பு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டவுடன் அக்டோபர் 5-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பை தேர்தல் ஆணையம் தெரிவிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here