உணவுக்குப் பணம் பெற மறுத்த, டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள்.

0
183

 07.10.2017 தில்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, போராடும் விவசாயிகளைச் சந்தித்தேன். சந்திக்க வேண்டுமென்று நேற்று ஓவியர் Elan Cheziyan செழியனிடம் பேசிக் கொண்டிருந்தேன். வழி குறித்து விசாரித்தபோது, ‘ மத்தியானம் சாப்பிட்டுட்டு… அப்புறம் போங்க’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஏன் அப்படி வற்புறுத்திச் சொன்னார் என்பதை விவசாயிகளைச் சந்தித்த பிறகுதான் எனக்குப் புரிந்தது. விவசாயிகளைச் சந்தித்த பிறகு… சோற்றில் குற்றவுணர்வு இல்லாமல் கை வைக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.
நான் போனபோது கேரள ஊடகம் ஒன்று நமது விவசாயிகளின் முழக்கங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது.

பகலுணவுக்காக இடைவெளியில் அவர்களைச் சந்தித்தேன்.
போராட்டக்காரர்களை ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து வெளியேறுமாறும் ராம்லீலா மைதானத்தில் போராட்டங்களை நடத்திக் கொள்ளுமாறும் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இடத்தைவிட்டுப் போகக்கூடாது என்றும்…. அப்பகுதியில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும் என்றும் பேசிக்கொண்டார்கள் அவர்கள்.

போராட்டக் களத்துக்கு அருகிருக்கும் சீக்கியக் குருத்துவாராவில் கொடுக்கப்படும் உணவை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்கிறார்கள். சாப்பாடு கிடைப்பதால்தானே போராட்டத்தை மாதக்கணக்கில் நடத்துகிறார்கள், ஆளரவமற்ற ராம்லீலா மைதானத்துக்கு நகர்த்தினால் தானே ஓடிவிடுவார்கள் என்பது அநீதிமன்றத்தின் எண்ணம்.
‘ இங்க சோறு கிடைக்குது… அதான் வந்து போராடுறானுங்க….’ ன்னு எங்களைக் கொச்சைப்படுத்திக்கூடப் பேசறாங்க சார்… சோத்துக்கு வக்கில்லாமயா சார் வந்து கிடக்கிறோம்? விவசாயிகள் வயித்திலடிக்கும் இந்த அரசாங்கத்தை அம்பலப்படுத்தத்தான் நூறு நாளுக்கும் மேல ராத்திரிப் பகலா இங்க கெடக்குறோம்….’ என்றார் ஒரு விவசாயி.
தமிழக ஊடகங்கள் இந்தப் போராட்டச் செய்திகளை ஊறுகாய் போலப் பயன்படுத்திக் கொள்ளுவதாக பெரும் வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.
அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
‘தினந்தோறும் குருத்துவாரா சாப்பாடுதான். இன்னக்கு ஒரு நண்பர் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். அதனால் இன்னிக்குச் சாம்பார் ரசம் சோறு’ என்றார் ஒரு விவசாயி.

பெரும் தயக்கத்தோடு ‘ சாப்பாட்டுக்குப் பணம் கொடுப்பேன்… வாங்கிக் கொள்ளுவீர்களா’ என்று கேட்டேன். மறுத்துவிட்டார்கள்.
‘யாரிடமும் ஒரு பைசாவும் வாங்க மாட்டோம்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள்.
கெஞ்சிக் கூத்தாடியபோது, ‘ ஓட்டலில் நீங்களே வாங்கிக் கொடுங்கள்’ என்றார்கள்.
ஒருவரை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி உணவகம் சென்றேன். டெல்லி ஆட்டோவாலாக்களுக்கு இந்தப் போராளிகளை நன்றாகத் தெரிந்திருக்கிறது.
தமிழக விவசாயிகளின் பச்சை வேட்டிக்கு ஒரு மரியாதை இருக்கிறது.
பிரதமர் வீட்டுக்கு முன்னால் இவர்கள் நடத்திய போராட்டம் பற்றி அந்த ஆட்டோவாலா பேசிக் கொண்டு வந்தார்.
உணவும் நோய் வாய்ப்பட்ட ஒருவருக்கு மருந்துகளும் வாங்கிக் கொடுத்து விடைபெற்றேன்.
விடைபெறும்போது கண்ணீர் கசிய இப்படிச் சொன்னேன்:
‘தமிழக இளைஞர்கள் உங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள். உங்களை அலட்சியப்படுத்தும் மத்திய மாநில அரசுகளைக் காறித் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்….’ என்றேன்.
‘உங்கள் போராட்டம் வெல்லும்… லால் சலாம் கிஸான் காம்ரேட்ஸ்’ என்று கரம் உயர்த்தினேன். புன்னகையுடன் விடை தந்தார்கள்.
கி.பார்த்திபராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here