சேலம் கச்சராயன் ஏரியை பார்வையிடும் ஸ்டாலின்…!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் உள்ள கச்சராயன் ஏரியை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ம் தேதி பார்வையிட இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஏரி,குளங்கள் தி.மு.க. சார்பில் தூர்வாரப்படும் என்று அறிவித்து, அதற்கான பணிகளை ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வந்தார். முதலமைச்சர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சராயன் ஏரி தி.மு.க. சார்பில் தூர்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஏரியை பார்வையிட ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி சென்றார். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி கோவையில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்டாலின் ஏரியைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஸ்டாலின் ஏரியை பார்வையிட அனுமதிப்பதில் கவுரவப் பிரச்னை இருக்கிறதா என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்தநிலையில், சேலம் கச்சராயன் ஏரியை ஸ்டாலின் வரும் 31-ம் தேதி பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment