தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டார் சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்..!

பெண் சீடர்களை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று சிறையில் இருக்கும் சாமியார் ராம் ரஹீம் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சானை தேடப்படும் குற்றவாளியாக 43 பேரில் ஒருவராக அரியானா போலீசார்  அறிவித்தனர்.
இதற்கு முன்பு ஹனிபிரீத் இன்சான், தேரா சச்சா சவுதா அமைப்பின் செய்தித் தொடர்பாளர்ஆதித்யா இன்சான் ஆகியோருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் மட்டுமே போலீசார் பிறப்பித்து இருந்த நிலையில், இப்போது தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர்.
20 ஆண்டுகள் சிறை
பெண் சீடர்களை பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குர்மீத் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை் தொடர்ந்து, தேரா சச்சா சவுதா அமைப்பினர் நடத்திய கலவரத்தில் 37 பேர் கொல்லப்பட்டனர், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரூ.5 கோடி
இந்த கலவரத்தை தூண்டிவிடுவதற்கு ரூ.5 கோடிவரை தேரா சச்சா அமைப்பினர் செலவு செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாமியாரின் வளர்ப்பு மகளை போலீசார் தேடி வந்தனர். ஆனால், திடீரென அவர் தலைமறைவானார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 25-ந்தேதி நடந்த கலவரம் தொடர்பான புகைப்படங்களையும்,வீடியோக்களையும் பொதுமக்கள் அளித்து உதவலாம் என  போலீசார் கேட்டுக்கொண்டனர்.
தனிப்படை
இது குறித்து பஞ்ச்குலா போலீஸ் கமிஷனர் ஏ.எஸ். சாவ்லா கூறியதாவது-
பொதுமக்களிடம் இருந்து கலவரம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை கேட்டிருந்தோம். அதிகமானவை வந்துள்ளன. அவை குற்றவாளிகளைப் பிடிக்க உதவியாக இருக்கும். தேடப்படும் குற்றவாளியாக 43 பேர் அறிவிக்கப்பட்டதில் ஹனிபிரித் மட்டுமே பெண் ஆவார். மற்றவர்கள் அனைவரும் இளைஞர்கள், அவர்கள் கையில் கம்புடன் சுற்றித் திரிந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஹனிபிரீத் இன்சான் நோபாளத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து, அங்கு தனிப்பிரிவு போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். எல்லை ஓர போலீஸ் நிலையங்களிலும் தேடப்படும் குற்றவாளிகள் 43 பேரின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் சிலர் கைது
மேலும், சாமியார் குர்மீத் சிங் தப்பிக்க சதித் திட்டம் தீட்டிய சுரீந்தர் திமான் இன்சான் கைது செய்யப்பட்டுள்ளார். தேரா அமைப்பின் முக்கிய நிர்வாகி பிரதீப் கோயல் இன்சான் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலும், மொகாலியில் பிரகாஷ் என்ற விக்கியும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment