கருப்பு பூஞ்சை தொற்று : கோவையில் 30 பேருக்கு கண் பார்வை இழப்பு!

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் கோவையில் 30 பேருக்கு ஒரு கண் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒன்றரை வருடத்திற்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனவிலிருந்து மீண்டவர்களுக்கு மிக பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 264 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 30 பேருக்கு ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர் என்.நிர்மலா அவர்கள் கூறியுள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், கண்பார்வை இழப்பு ஏற்பட்ட அனைத்து நோயாளிகளும் தாமதமாக வந்தவர்கள் என கூறியுள்ளார்.

மேலும், அறிகுறிகளை கண்டதும் மருத்துவமனை விரைந்த அனைத்து நோயாளிகளுமே முழுமையாக குணமடைந்து உள்ளதாக கூறிய அவர், ஏற்கனவே சுகாதாரத்துறை மூக்கில் இரத்தம், சிவந்த கண் மற்றும் முகம், பல் வலி ஆகியவை தான் இதற்கான அறிகுறி என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே லேசான அறிகுறிகள் உள்ள போதே மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal