பாபா ராம்தேவை கண்டித்து கருப்பு தினம் – இந்திய மருத்துவர்கள் சங்கம் கடைபிடிப்பு..!

நவீன மருத்துவ முறைகளை தவறாகப் பேசிய பாபா ராம்தேவை கண்டித்து,அகில இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் இன்று கருப்பு தினத்தை கடைபிடித்துள்ளனர்.

பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.ராம்தேவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.பின்னர், ராம்தேவ் சார்பில் ஒரு அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது.

அதில் தனது கருத்தை திரும்பப் பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில கிளை “நவீன மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கிடையில், இந்திய மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கும் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார். அதனால் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து,பாபா ராம்தேவ் தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,நவீன மருத்துவ முறைகளை தவறாகப் பேசிய பாபா ராம்தேவை கண்டித்து,அகில இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் இன்று கருப்பு தினத்தை கடைபிடித்துள்ளனர்.

மேலும்,இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் கூறுகையில்,”கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னலமின்றி பணியாற்றி வரும் மருத்துவர்களையும்,பணியாளர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும்,அரசின் தடுப்பூசி இயக்கத்தை அவமதிக்கும் நோக்கிலும் பாபா ராம்தேவ் பேசியுள்ளார்.

எனவே,பாபா ராம்தேவை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று,நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,இன்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது”,எனத் தெரிவித்துள்ளனர்.