#BREAKING : புதுச்சேரி சபாநாயகராக பதவி ஏற்றுக்கொண்ட பாஜக எம்.எல்.ஏ. செல்வம்..!

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.

பின்னர், என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில்,புதுச்சேரி சபாநாயகர் தேர்தலில் பாஜக சார்பில் எம்.எல்.ஏ.செல்வத்தை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர், எம்.எல்.ஏ.செல்வம் புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு நேற்று முன்தினம்  வேட்புமனு தாக்கல் செய்தார். புதுச்சேரி சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் செல்வம் போட்டியின்றி  நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார். முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர்  சிவா ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். புதுச்சேரியில் பாஜகவை சார்ந்த எம்எல்ஏ ஒருவர் சபாநாயகராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.

author avatar
murugan