தமிழகத்துக்குள் பாஜக நுழைந்தது…சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர்கள் சென்றுவிட்டார்கள் – எல்.முருகன்

தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டது என்று மேற்குவங்க வன்முறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்.முருகன் பேச்சு.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன்பின் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், மேற்குவங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பயங்கரவாத செயலில் மம்தா அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் குற்றசாட்டினார். இதன்பின் பேசிய எல் முருகன்,  தமிழகத்தைப் பொறுத்தவரையில், பாஜகவை நுழையவிடக்கூடாது என்று பலரும் எண்ணினர். ஆனால் தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டது. சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர்கள் சென்றுவிட்டார்கள் குறிப்பிட்டார்.

இந்த ஆர்பாட்டத்தில் ஒழிப்போம் ஒழிப்போம்! மம்தா பானர்ஜியின் வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்போம் என்று பதாகைகள் ஏந்தியும், கோஷமிட்டும் பாஜக தொண்டர்கள் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனிடையே, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 4 இடங்களில் பாஜக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்